கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் சேவாக்! எதற்காக தெரியுமா?
shewag alerts indian team ahead of australia tour
கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த இரண்டு மாத சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று T20, 4 டெஸ்ட் போட்டி போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
டி20 தொடர் நவம்பர் 21-ம் தேதியும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 6ம் தேதியும், ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதியும் துவங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் வெற்றிகளை குவித்து வரும் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவான அணியாகவே உள்ளது. அதே நேரத்தில் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி சற்று வலுவில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அந்த அணியை குறைத்து மதிப்பிடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து விரேந்திர சேவாக் கூறுகையில், "கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என எந்த நாட்டிலும் சிறப்பாக ஆடி வெற்றியை பறிக்கும் திறமை பெற்ற அணி. ஆனால் அதற்கு முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் ஆடி ஆதிக்கம் செலுத்த வேண்டும். அப்படி ஆடினால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தலாம்.
இதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சரிவை சந்தித்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் அந்த அணியின் பேட்டிங் வரிசை வலுவில்லாமல் தான் இருக்கிறது. இருந்தாலும் தற்போதைய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சொந்த மண்ணில் அதிகமாக விளையாடி உள்ளார்கள். அங்கு நடைபெற்ற முதல் தர போட்டிகளில் அதிகளவில் விளையாடிய அவர்கள் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடுவார்கள் என்பது போல் தோன்றுகிறது. எனவே இந்திய அணி சற்று எச்சரிக்கையுடன் ஆடவேண்டும்" என்று கூறியுள்ளார்.