சிராஜ் முதலில் வீட்டிற்குச் செல்லாமல், தந்தையின் சமாதிக்குச் சென்று கண்ணீர் சிந்தி அழுத புகைப்படம்.!
இந்திய அணியின் இளம் வீரரான முகமது சிராஜ், ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியவுடன் நேராக தந்தையின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் புதுமுகமாக அறிமுகமாகினர்.
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் அவுஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய சென்று சிட்னியில் தனிமை முகாமில் இருந்தார். அந்தசமயத்தில், பெங்களூருவில் இருந்த அவரது தந்தை காலமானார்.
ஆனால் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடி, வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்பதுதான் தனது தந்தையின் லட்சியம். அதை நிறைவேற்றுவதுதான் கடமை எனத் தெரிவித்து நாடு திரும்பாமல் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டார் முகமது சிராஜ்.
முகமது சிராஜுக்கு முதல் டெஸ்ட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை, அதன் பின் இரண்டாவது டெஸ்ட்டில் ஷமிக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக சிராஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். சிறப்பாக விளையாடிய இவர், நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்திய அணியும் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
இதனால் தந்தையின் ஆசையை நிறைவேற்றிய சிராஜிற்கு இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வந்தன. இந்தநிலையில், தொடரை முடித்த இந்திய அணி தற்போது நாடு திரும்பியுள்ளது. சிராஜ் முதலில் வீட்டிற்குச் செல்லாமல் விமான நிலையத்திலிருந்து நேரடியாகத் தந்தையின் சமாதிக்குச் சென்று மலர் தூவி கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார்.