ஒரு புள்ளியில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ஸ்மித்! மூன்றே இன்னிங்சில் சாதனை
Smith leads first place in icc test rankings
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் ஏற்கனவே கடந்த டிசம்பர் 2015 முதல் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வந்தார். பின்னர் ஓராண்டு தடை விதிக்கப்பட்டதால் கடந்த ஆகஸ்ட் 2018ல் விராட் கோலி முலலிடத்தை கைப்பற்றினார்.
இந்நிலையில் தடை நீங்கி முதல் முறையாக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார். ஓராண்டு தடைக்குப் பிறகு ஆடிய மூன்றே இன்னிங்சில் ஸ்மித் இந்த இடத்தை பிடித்துள்ளார்.
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசிய ஸ்மித் இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் விளாசினார். பின்னர் காயம் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் அவரது தற்போதைய சராசரி 63.2 ஆக உள்ளது.
மேலும் முதல் இடத்தில் இருந்த விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி இன்னிங்சில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனதால் அவரது புள்ளிகள் குறைந்தன. இதனால் ஒரு புள்ளி கூடுதலாக பெற்று (904) ஸ்மித் முதலிடத்தை பிடித்துள்ளார். 903 புள்ளிகளுடன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார்.