கடைசி போட்டியின் இறுதி பந்தில் மலிங்கா படைத்த சாதனை என்ன தெரியுமா?
srilanka cricket player - malinga - rest of odi match
இலங்கை அணியின் முன்னனி வேகப்பந்துவீச்சாளரான மலிங்கா நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 2004 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடிய மலிங்கா 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நேற்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் குசல் பெரேரா அதிகபட்சமாக 111 ரன்கள் எடுத்தார்.
315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் மலிங்கா வீழ்த்தினார். தனது கடைசி போட்டியாக இருந்தாலும் வேகம் குறையாது துல்லியமாக பந்து வீசிய மலிங்கா உற்சாகமாக காணப்பட்டார்.
தொடர்ந்து 42வது ஓவரை வீசிய மலிங்கா அந்த ஓவரின் நான்காம் பந்தில் வங்கதேச அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார். தன் கடைசி போட்டியில் 9.4 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார் மலிங்கா. இதில் இரண்டு மெய்டன் ஓவர்களும் அடங்கும். 226 போட்டிகளில் 338 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார் மலிங்கா.
தன் கடைசி போட்டியில் 3 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவை வீழ்த்தி, ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார். அனில் கும்ப்ளே 337 ஒருநாள் போட்டி விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.