அம்பத்தி ராயுடு வாங்கிய 3D கிளாஸ் வீணாகவில்லை; முதல் போட்டியிலேயே வரலாற்றில் இடம்பிடித்த விஜய் ஷங்கர்
vijay shankar replies to ambathi rayudu
இந்திய அணியில் நான்காவது வீரராக களமிறங்க பெரிய வெற்றிடம் காணப்பட்டது. அதற்காக முதலில் அம்பதி ராயுடுவிற்கு பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஆனால் உலககோப்பைக்கு முன்பு ஆடிய தொடர்களில் அம்பதி ராயுடு சரியாக ஆடவில்லை.
இந்நிலையில் அந்த நான்காவது வீரரை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் கடைசி நேரத்தில் உலகக்கோப்பை அணியில் தேர்வாகினார்கள் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் மற்றும் கேஎல் ராகுல். விஜய் ஷங்கரை பொறுத்தவரை பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்துவீச்சு என 3 பரிமாணங்களில்(3D) இந்தியா அணிக்கு உறுதுணையாக இருப்பார் என விளக்கமளித்தார் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத். உலகக் கோப்பை தொடருக்கு முன்பு வெறும் 9 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார் விஜய் சங்கர்.
உலகக்கோப்பை அணியில் இடம்கிடைக்காத விரக்தியில் இருந்த அம்பத்தி ராயுடு, விஜய் ஷங்கரை கேலி செய்யும் விதமாக அவரின் ஆட்டத்தை பார்க்க 3 பரிமாண(3D) கண்ணாடி இப்பவே ஆர்டர் செய்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக நேற்றைய பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக ஆட்டத்தில் தனது திறமையை நிரூபித்து வரலாற்றில் இடம்பித்தார் விஜய் ஷங்கர்.
பேட்டிங்கை பொருத்தவரை கடைசி நேரத்தில் விஜய் சங்கர்ருக்கு வாய்ப்பு கிடைத்தது. 15 பந்துகளை சந்தித்த அவர் 15 ரன்கள் எடுத்தார். ஆனால் பந்துவீச்சில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் விஜய் சங்கர். இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர்கள் ஆன பும்ரா மற்றும் புவனேஸ்வர்குமார் முதல் விக்கெட்டை கைப்பற்றுவதற்கு நீண்ட நேரம் போராடினர்.
ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீசிய போது புவனேஷ்குமார் காலில் காயம் ஏற்படவே பாதியில் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக பந்துவீச வந்த விஜய் சங்கர் முதல் பந்திலேயே இந்தியாவிற்கு முதல் விக்கெட்டை பெற்றுத் தந்தார். உலகக் கோப்பை போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றிய விஜய் ஷங்கரை பலரும் பாராட்டி வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் முப்பத்தி ஐந்தாவது ஓவரை வீசிய விஜய் சங்கர் மீண்டும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.