அவுட்டே இல்லாமல் தானே அவுட்டாகி வெளியேறிய விராட் கோலி! அதிர்ச்சியில் ரசிகர்கள்
virat kohli sent himself out without out
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 136 ரன்கள் குவித்தனர். 24 ஆவது ஓவரில் கேஎல் ராகுல் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி சிறப்பாக ஆடி 65 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா 140 ரன்களிலும், ஹர்டிக் பாண்டியா 26 ரன்களிலும், தோனி ஒரு ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆட்டத்தில் 47 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆட்டம் மீண்டும் துவங்கியது. அப்போது இந்திய அணியின் விராட் கோலி மற்றும் விஜய் சங்கர் களத்தில் இருந்தனர்.
முகமது அமீர் வீசிய 48 வது ஓவரில் தலைக்குமேல் வந்த பந்தை விராட் கோலி சுழற்றி அடிக்க முயற்சி செய்தார். அப்போது பந்து பேட்டில் படாமல் கீப்பரிடம் சென்றது. விக்கெட் கீப்பர் மற்றும் பவுலர் இருவருமே விக்கெட்டுக்காக சப்தம் எழுப்பினர். அம்பயர் அவுட் கொடுப்பதற்கு முன்பே விராட் கோலி வெளியேற துவங்கி விட்டார். எனவே அவுட் என அம்பயரும் அறிவித்துவிட்டார். உண்மையில் பந்து விராட் கோலியை கடந்து சென்ற போது ஒருவித சப்தம் வந்தது.
ஆனால் பின்னர் ரீப்ளே செய்து பார்த்ததில் உண்மையில் விராட் கோலியின் பேட்டில் பந்து படவே இல்லை. அவரது பேட்டில் ஹாண்டிலில் இருந்து தான் சப்தம் வந்துள்ளது. இதனை பார்த்த விராட் கோலியும் சக வீரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ரசிகர்களுக்கும் இது மிகப் பெரும் அதிர்ச்சியாய் அமைந்துவிட்டது. விராட் கோலி கடைசி வரை களத்தில் இருந்திருந்தால் இன்னும் 15 ரன்கள் கூடுதலாக அடித்து இந்திய அணி 350 ரன்களை கடந்து இருக்கலாம்.