கோப்பையை தவறவிட்டாலும் தனி ஆளாய் போராடிய வில்லியம்சனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!
williamson recieved man of the tournament in wc2019
மிகப் பெரிய நட்சத்திர வீரர்களை கொண்டிராத நியூசிலாந்து அணியை உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை கொண்டு வந்து இதுவரை வரலாறு காணாத அளவிற்கு ஒரு சிறப்பான இறுதிப்போட்டயை வழிநடத்தியவர் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.
லீக் சுற்றில் ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி கடைசி லீக் போட்டிகளில் தொடர் தோல்விகளை பெற்றது. அரையிறுதிக்குள் நுழையுமா நுழையாதா என்ற சந்தேகத்தில் இருந்த நியூசிலாந்து அணி ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளிவிட்டு நான்காவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் பலம்வாய்ந்த இந்திய அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி. மேலும் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கு சற்றும் குறைவில்லாமல் மிகுந்த போட்டியை அளித்தது. இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டி டையில் முடிந்து அடுத்து நடந்த சூப்பர் ஓவர் போட்டியும் டையில் முடிந்தால் அதிக பவுண்டரிகள் அடிப்படையில் கோப்பையை இழந்தது நியூசிலாந்து அணி.
இந்த தொடர் முழுவதும் நியூசிலாந்து அணியை தனது திறமையான பேட்டிங்கால் கடைசிவரை கொண்டுவந்தவர் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். மேலும் இவரது கேப்டன் திறமையைப் பற்றியும் நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் வில்லியம்சன் 578 ரன்கள் எடுத்து நான்காவது இடத்தில் உள்ளார். இருப்பினும் அவரது திறமையைப் பாராட்டி 2019 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.