காவிமயமாகும் இந்திய அணி, சீருடையில் திடீர் மாற்றம்; இதுதான் காரணமா?
world cup 2019 - indian team change jersy - orange color
இன்னும் ஒரு சில தினங்களில் நாளை மறுநாள் 30 ஆம் தேதி உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள அனைத்து அணி வீரர்களும் இங்கிலாந்து சென்றுள்ளனர். இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது.இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 10 அணிகளும், பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் சீருடையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல தடவைகள் இந்திய அணியின் சீருடை மாற்றப்பட்டு இருந்தாலும் நீல நிற பின்னணியில் தான் சீருடை அமைந்திருக்கும். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக முதன்மை நிறமாக காவி நிறம் கலந்து உள்ளது.
ஏனென்றால் இந்த முறை ஐசிசி புதிய விதிமுறை ஒன்றை வகுத்துள்ளது. அதாவது ஒரு போட்டியில் ஆடும் இரு அணியினரும் ஒரே நிற வகையிலான சீருடையை அணியக்கூடாது என்பதுதான் அந்த புதிய விதி. முன்பாகவே அனைத்து அணியினருக்கும் இவ்வாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில் இந்திய அணி தனது இரண்டாம் கட்ட சீருடையாக இதை தேர்வு செய்துள்ளது.
உதாரணமாக இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நீள நிற சீருடையை அணிந்து விளையாடி வருகின்றனர். இதில் இரு அணிகள் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை ஏற்படும் போது ஏதாவது ஒரு அணி தங்கள் அணியின் இரண்டாவது சீருடையை அணிந்து விளையாட வேண்டும்.
இதனால் தற்போது இந்திய அணி தங்களது இரண்டாவது சீருடை நிறமாக ஆரஞ்சு (காவி) நிற சீருடையை தேர்வு செய்துள்ளது. வரும் ஜூன் 22 , ஜூன் 30 ஆகிய தேதிகளில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த இரு போட்டிகளில் மட்டுமே இந்த காவி சீருடையை இந்திய அணி பயன்படுத்தும். மற்ற அனைத்து போட்டிகளுக்கும் பழைய நீல நிற சீருடையை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.