பக்கா ஜெண்டில்மேன் சார் இந்த பட்லரு... களத்தில் ராஜஸ்தான் வீரர் பட்லர் செய்த காரியம்..! குவியும் பாராட்டு..!
பக்கா ஜெண்டில்மேன் சார் இந்த பட்லரு... களத்தில் ராஜஸ்தான் வீரர் பட்லர் செய்த காரியம்..! குவியும் பாராட்டு..!
15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது . சிறப்பாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 52 பந்துகளில் 87 ரன்களும் , டேவிட் மில்லர் 14 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் அதிக ரன்கள் எடுத்திருந்த ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் ஆரஞ்சு நிற தொப்பியை வைத்திருந்தார். ஆனால் நேற்றைய தினம் ஹர்திக் பாண்ட்யா 87 ரன்கள் எடுத்ததன் மூலம் பட்லரை முந்தினார். இதனை அறிந்த பட்லர் களத்தில் இருக்கும்போதே தனது ஆரஞ்சு நிற தொப்பியை கழற்றிவிட்டார். போட்டியின் நடுவே இவ்வாறு செய்ய வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.
ஆனால் தான் முதலிடத்தில் இருந்து இறங்கிவிட்டோம் என தெரிந்ததும் பட்லர் தொப்பியை கழற்றிய செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. ரசிகர்கள் பட்லரை பாராட்டிய நிலையில், முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது பதிவில், ஜாஸ் பட்லர் ஒரு ஜெண்டில்மேன். அவரிடம் இருந்து சக வீரர்கள் கற்று கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.