சிவகாசி வங்கியில் அடகு நகைகளை ஏலம் எடுத்து தருவதாக கூறி ஈரோடு தொழிலதிபரை ஏமாற்றி ரூபாய் 13.85 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். சிவகாசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சார்ந்த செல்வம் என்பவரது மனைவி பேச்சியம்மாள். பேஸ்புக் மூலம் ரமேஷுக்கு நண்பராக அறிமுகமானார்.
சிவகாசி கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணி செய்வதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பேச்சியம்மாள் 380 கிராம் அடகு நகைகள் ஏலத்துக்கு வர இருப்பதாகவும் 13.85 லட்சம் கொடுத்தால் அதனை ரமேஷுக்கு வாங்கி தருவதாகவும் கூறி இருக்கிறார்.
இதனை நம்பி ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சிவகாசி வந்து பேச்சியம்மாளை சந்தித்து இருக்கின்றனர். மேலும் அவர் கூறியபடி ரூ.1.85 லட்சம் ரொக்கமாகவும், ரூ.11 லட்சத்தை பேச்சியம்மாள் கூறிய வங்கிக் கணக்கிலும் ரமேஷ் செலுத்தி உள்ளார். அதன் பிறகு நகைகளை வாங்கி வருவதாக வங்கிக்கு சென்றவர் நீண்டநேரம் ஆகியும் திரும்பாததால் அவரது செல்போனை தொடர்பு கொண்டுள்ளனர். அவரது செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து சிவகாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ரமேஷ். இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் நேற்று பேச்சியம்மாளை கைது செய்து அவரிடமிருந்து 12 லட்சம் ரூபாயை மீட்டனர்.