தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
144 not extend in tamilnadu
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் சென்னையில் கொரோனா தொற்று குறைந்துள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 31,668 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் நிதிநிலைக்கு ஏற்ப மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.
ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி உள்ளது. நோயை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம். சென்னையில் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.