கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம்..! உருவாக்கப்பட்ட வாட்ஸப் குழு.. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 5 இளைஞர்கள் கைது.!
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம்..! உருவாக்கப்பட்ட வாட்ஸப் குழு.. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 5 இளைஞர்கள் கைது.!
கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தமிழகம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளியில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டதுடன் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் "ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி TN-55" என்ற பெயரில் வாட்ஸப் குழு உருவாக்கப்பட்டு, அந்த குரூப்பில் ஏராளமானோர் சேர்க்கப்பட்டனர்.
மேலும் அந்த குரூப்பில் உயிரிழந்த மாணவிக்காக நீதிக் கேட்டு ஒன்றிணைந்து போராடுவோம் என்ற பதிவுகளையும் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்த தகவல் காவல்துறை கவனத்திற்கு சென்றது. இதுதொடர்பாக அந்த குரூப்பில் உறுப்பினர்களாக இருந்த பலரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காட்டை சேர்ந்த சுந்தர்ராஜ், சிக்கபட்டியைச் சேர்ந்த மணிராஜ், கட்ராம்பட்டியைச் சேர்ந்த அருண்குமார், மேலபோண்ணன்விடுதியை சேர்ந்த குமரேசன், மாங்கோட்டை சேர்ந்த ஐயப்பன் ஆகிய 5 இளைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.