7 மாத கர்ப்பிணியான 22 வயது காதல் மனைவியை முகத்தை சிதைத்து கொன்ற எஸ்.ஐ மகன்.. திருமணமான 8 மாதத்தில் வெறிச்செயல்..!
7 மாத கர்ப்பிணியான 22 வயது காதல் மனைவியை முகத்தை சிதைத்து கொன்ற எஸ்.ஐ மகன்.. திருமணமான 8 மாதத்தில் வெறிச்செயல்..!
குடும்ப நலனுக்காக சென்னையில் தங்கியிருந்து பணியாற்றி வந்த 22 வயது இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்திய காவல் உதவி ஆய்வாளர் மகன், பெண் 7 மாத கர்ப்பமாக இருக்கையில் கட்டையால் அடித்து கொன்று மழையின் உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்ற பயங்கரம் நடந்துள்ளது. மகளின் எதிர்கால வாழ்க்கையை எண்ணி வருந்திய பெற்றோர், எங்காவது நன்றாக இருக்கட்டும் என எண்ணியிருந்த வேலையில், அவர்களுக்கு இடியாய் இறப்பு செய்தி சென்ற துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலமதி மலையில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லும் வனப்பகுதியில் இளம்பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் பாகாயம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த பெண் யார்? என விசாரணை நடத்தினர். பெண்ணின் முகம் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக குற்றவாளி முகத்தை சிதைத்து கொலை செய்திருந்த நிலையில், அங்கிருந்த சி.சி.டி.வி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, வாலிபருடன் இருசக்கர வாகனத்தில் பெண்மணி ஒருவர் செல்வதும், மீண்டும் இளைஞர் மட்டுமே திரும்பி செல்வதும் பதிவாகி இருந்தது குறித்த காட்சிகள் கிடைத்தன.
அந்த கேமிராவில் பதிவான வாகன பதிவெண் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, வேலூர் ஜீவா நகரில் வசித்து வரும் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷின் மகன் கார்த்திக் (வயது 22) இருசக்கர வாகனத்தில் வந்து சென்றுள்ளது உறுதியானது. அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிதம்பரத்தை சேர்ந்த பெண்மணி குணப்பிரியாவை (வயது 22) கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
அதாவது, காவல் உதவி ஆய்வாளர் மகன் கார்த்திக், இன்ஸ்டாகிராம் மூலமாக குணப்பிரியாவிடம் பழகி வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது நேரிலும் சந்தித்து காதலை வளர்த்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கார்த்திக் வள்ளிமலை கோவிலில் வைத்து குணப்பிரியாவை திருமணம் செய்துள்ளார். இந்த காதல் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், கார்த்திக் தனது மனைவி குணப்பிரியாவுடன் நண்பர்களின் வீட்டில் தங்கி இருந்துள்ளார். அப்போது, கர்ப்பிணியான குணப்பிரியா சென்னையில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
கடந்த ஜனவரி 25ம் தேதி 7 மாத கர்ப்பிணியாக இருந்த குணப்பிரியாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பாலமதிக்கு சென்ற நிலையில், இருவரும் அங்கு பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, குணப்பிரியா தான் 7 மாத கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் விரைவில் குழந்தை பிறந்துவிடும். இதனால் நீ இங்கு வாடகைக்கு வீடு பார்த்தல் நாம் தங்கலாம். அல்லது உனது வீட்டிற்கு என்னை அழைத்து செல் என தெரிவித்துள்ளார்.
அப்போது தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கார்த்திக், குணப்பிரியாவை கட்டையால் தலை மற்றும் முகத்தில் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதனால் அவர் உயிரிழந்துவிடவே, மலையின் மீது இருந்து கர்ப்பிணி மனைவியின் உடலை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார் என்பது அம்பலமானது. இதனையடுத்து, கார்த்திக்கை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.