மனதை உருக்கும் காட்சிகள் !! தலைவர் கருணாநிதியைப் பார்க்க திருக்குவளையிலிருந்து தனியாகச் சென்னை வந்த 85 வயது பட்டி
மனதை உருக்கும் காட்சிகள் !! தலைவர் கருணாநிதியைப் பார்க்க திருக்குவளையிலிருந்து தனியாகச் சென்னை வந்த 85 வயது பட்டி
கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் ஓய்வில் இருக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை, வயது முதுமை காரணமாக சற்று நலிவடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தர தொடங்கினர். நேற்றிரவு முதலே தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவியத் தொடங்கிவிட்டனர். கலைஞர் வீட்டுக்குச் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளன.
தி.மு.க தலைவராகப் பொன்விழா ஆண்டைக் கடக்கிறார், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி. ஆனால், அதைக் கொண்டாட வேண்டிய கருணாநிதியின் உடல்நிலை குறித்த கவலையில் சோர்ந்திருக்கிறார்கள், தி.மு.க-வின் தொண்டர்கள். இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், தலைவரின் பொன்விழா கொண்டாட்டங்களுக்கு ஓய்வுகொடுத்துள்ளார்கள் தி.மு.க-வினர்.
கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் மக்கள் மிகுந்த வருத்தத்தோடு இருப்பதாகக் கூறப்படுகிறது. திருக்குவளையைச் சேர்ந்த 85 வயது ரத்தினம் என்னும் மூதாட்டி, கருணாநிதி உடல்நலம் குறித்து கேள்விப்பட்டதும் இன்று அதிகாலையே பஸ் ஏறி சென்னை வந்துவிட்டார். கோபாலபுரத்தில் அவரைக் கண்ட தி.மு.க தொண்டர்கள் அவர் பற்றி விசாரித்துள்ளனர்.
`இன்னைக்கு காலைல பஸ் ஏறி மத்திய கைலாஷ் வந்துட்டேன். அங்கிருந்து அட்ரஸ் கேட்டு பஸ் புடிச்சு இங்க வந்தேன். ஒரேயொரு தடவ அவர ஓரமா நின்னு பார்த்துட்டு போயிடுறேன் பா... எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதே தலைவர்தான் பா' என்று கூறியிருக்கிறார் கண்ணீருடன். இதைக் கவனித்த தி.மு.க எம்.எல்.ஏ பி.கே.சேகர் பாபு, அவரை மு.க.ஸ்டாலினிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். கருணாநிதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரை இப்போது பார்க்க முடியாது என்றும் ஸ்டாலின் மூதாட்டியிடம் பொறுமையாக விளக்கியிருக்கிறார். அதன் பின்னர், அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார் ரத்தினம். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து தி.மு.க தொண்டர்கள் வழியனுப்பி வைத்துள்ளனர்.