அட்சய பாத்திரம் என கூறி அட்டைப் பெட்டியை கொடுத்து தொழிலதிபரிடம் 2 கோடி ரூபாய் பறித்த மர்ம ஆசாமிகள்!
9 men cheated bussinessman by atchaya pathiram
அதிசய அட்சய பாத்திரம் என கூறி வேலூர் தொழிலதிபரிடம் அட்டைப் பெட்டியை 2.10 கோடிக்கு விற்ற 8 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த தொழிலதிபவர் ஒருவர் கோடிக் கணக்கில் பணம் புரளும் தொழிலினை செய்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 9 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் ஒரு அட்சய பாத்திரம் இருப்பதாகவும் அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்தால் கிலோ கணக்கில் தங்க நகைகள் இருக்கும் புதையலை காட்டும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் அவரை நம்ப வைக்க சித்தூரில் உள்ள ஒரு வீட்டிற்கு அவரை வரவழைத்து அந்த பாத்திரத்தை காட்டியுள்ளனர். மேலும் அதிலிருந்து வந்த ஒளியின் மூலம் அவர்கள் ஏற்கனவே புதைத்து வைத்திருந்த தங்க நகைககளை எடுத்து தொழிலதிபரிடம் காண்பித்துள்ளனர்.
இதையெல்லாம் பார்த்து நம்பிய அந்த தொழிலதிபர் தனக்கு இந்த அட்சய பாத்திரம் வேண்டும் என அவர்களிடம் கேட்டுள்ளார். முதலில் பல கோடி ரூபாய் விலை பேசிய அவர்கள் கடைசியில் 2.10 கோடிக்கு அந்த அட்சய பாத்திரத்தை தொழிலதிபரிடம் விற்றுள்ளனர்.
அவர்கள் கூறியது போலவே இதுகுறித்து தனது மனைவியிடம் கூட தெரிவிக்காத தொழிலதிபர் பூஜை அறையில் வைத்து தினமும் பூஜை செய்துள்ளார். பின்னர் சில நாட்களுக்கு பிறகு அதனை திறந்து பார்த்த தொழிலதிபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது அட்சய பாத்திரம் அல்ல, தங்க வண்ணத்தில் பேப்பர் ஒட்டப்பட்ட அட்டைப் பெட்டிக்குள் வெறும் பேட்டரி மற்றும் சீரியல் பல்புகளை வைத்து அவர்கள் ஏமாற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சித்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார் தொழிலதிபர். அவர் கூறிய அடையாளங்களை வைத்து மர்ம கும்பலை போலீசார் தேடத் துவங்கினர். இறுதியில் அந்த கும்பலை சேர்ந்த 8 பேர் திருப்பதி அருகே பிடிப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் இருந்து 1.29 கோடி பணம் மற்றும் 2 கார்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.