இதனை செய்தால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு.! ஆய்வில் வெளியான தகவல்.!
தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு என்று நிதி ஆயோக் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது கொரோனாவிலுருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி உள்ளது. ஆரம்பத்தில் பலரும் தடுப்பூசி போடுவதற்கு தயங்கிவந்த நிலையில், தற்போது அனைவரும் தடுப்பூசி போடுவதற்கு முன்வந்துள்ளனர்.
இந்தநிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். முன்களப் பணியாளர்களான போலீசாரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாத 4 ஆயிரத்து 868 போலீசாரில் 15 பேர் கொரோனா தொற்றில் இறந்ததும், தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 35 ஆயிரத்து 856 பேரில் 9 பேர் இறந்ததும் தெரியவந்தது. ஆனால் 2 டோஸ்களும் போட்டுக்கொண்ட 42 ஆயிரத்து 720 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 2 பேர் மட்டுமே பலியானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வின்படி, ஒரு டோஸ் தடுப்பூசி 92 சதவீதம் பாதுகாப்பானது என்றும், 2 டோஸ்கள் 98 சதவீதம் பாதுகாப்பானது என்றும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.