வேலை இல்லாததால் குடிபோதைக்கு அடிமையான பட்டதாரி இளைஞர்: வாழ்க்கையை தொலைத்த பரிதாபம்..!
வேலை இல்லாததால் குடிபோதைக்கு அடிமையான பட்டதாரி இளைஞர்: வாழ்க்கையை தொலைத்த பரிதாபம்..!
கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் அருகேயுள்ள அச்சன் குளம் பகுதியில் உள்ள ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் சுரேஷ் ராஜா ( 22). பட்டதாரியான இவர், சரியான வேலை கிடைக்காததால் மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று வந்தார்.
அப்போது சுரேஷ் ராஜாவுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. குடிபோதையில் சிலருடன் தகராறிலும் ஈடுபட்டு வந்து உள்ளார். இந்த நிலையில், இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரது மகன் சாம்சன் மனோ (18) என்பவருடனும் சுரேஷ் ராஜாவுக்கு தகராறு இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக குடி போதையில் இருந்த சுரேஷ்ராஜாவை, சாம்சன்மனோ மற்றும் சிலர் கடப்பாரை மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் சுரேஷ்ராஜா பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கன்னியாகுமரி காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அதனை தொடர்ந்து சாம்சன் மனோவை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (54), அவரது மகன் ஆதிஞான ஜெபின் (19) ஆகியோருக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆதிஞான ஜெபின், தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் சாம்சன் மனோவும் நண்பர்கள். சுரேஷ்ராஜா நேற்று முன்தினம் அவர் மது போதையில் தகராறு செய்ததோடு அரிவாளுடன் வந்து மிரட்டியதாகவும் சாம்சன் கூறி உள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.