உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு.!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக கார் தருவது பற்றி ஜல்லிக்கட்டு நிர்வாக கமிட்டி பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் திருநாளையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு உலகில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 14-ந் தேதியும், பாலமேட்டில் 15-ந் தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.
மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடி வீரர்களாகக் களமிறங்க ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்திருந்தனர். அதன்படி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பதிவு செய்தவர்கள் பட்டியலில் இல்லாத ஒருவர்தான் முதல் பரிசை பெற்றுச் சென்றுள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர், விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த கண்ணன். இவர் பெயர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கப் பதிவு செய்தவர் பட்டியலில் இல்லை. மாடுபிடி வீரராக முறையாக பதிவு செய்யாமல், மருத்துவ பரிசோதனை செய்யாத கண்ணன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு அனைத்து சுற்றிலும் பங்கேற்று 12 மாடுகளை பிடித்துள்ளார்.
ஆனால் அவர் மாடுகளை அழைத்து வரும் வாடிவாசல் வழியாக வந்து ஆள்மாறாட்டம் செய்து கண்ணன் விளையாடியுள்ளார். ஹரிகிருஷ்ணனின் 33ம் நம்பர் பனியனை அணிந்து கண்ணன் போட்டியில் பங்கேற்றுள்ளார். நாட்டில் மாபெரும் போராட்டங்கள் காரணமாக மீண்டும் உயிர் பெற்று, அதற்கு அடையாளமாகத் திகழும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் போட்டியில் இப்படி ஒரு மோசடி oநடந்திருப்பதற்கு தீர்வு வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து மதுரை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய விசாரணை அறிக்கையில், முதல் பரிசாக கார் தருவது பற்றி ஜல்லிக்கட்டு நிர்வாக கமிட்டி பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம், விழா கமிட்டி எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவதாக கண்ணன் மற்றும் ஹரிகிருஷ்ணன் கூறி உள்ளதாக தெரிவித்துள்ளார்.