எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்று உறுதி கூறி ஏமாத்திட்டீங்களே.... ஆலங்குடி அ.ம.மு.க வேட்பாளர் வெளியிட்ட நெகிழ்ச்சி பேனர்..!
எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்று உறுதி கூறி ஏமாத்திட்டீங்களே.... ஆலங்குடி அ.ம.மு.க வேட்பாளர் வெளியிட்ட நெகிழ்ச்சி பேனர்..!
தமிழகத்தில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில்
திமுக 9 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும், சுயேட்சை 4 இடங்களையும் பெற்றுள்ளது. ஆலங்குடி பேரூராட்சியில் அதிக வெற்றிகளை பெற்ற திமுகவினர் வெற்றியை சந்தோசமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில், ஆலங்குடி பேரூராட்சியில் உள்ள 1-வது வார்டில் திமுகவிற்கும், அ.ம.மு.க-விற்கும் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் இந்துமதி 398 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அந்த வார்டில் போட்டியிட்ட அ.ம.மு.க வேட்பாளர் ஜெனிட்டா மேரி 287 வாக்குகள் பெற்று 111 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்தநிலையில், அ.ம.மு.க வேட்பாளர் அவருக்கு வாக்கு அளித்தவர்களுக்கும், அளிக்காதவர்களுக்கும் நன்றி தெரிவித்து பேனர் ஒன்றை வைத்துள்ளார். அதில், "J.ஜெனிட்டா மேரி ஆகிய என்னை ஆதரித்து வாக்களித்த 287 வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்று உறுதி கூறி வாக்களிக்காத அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.