மின்வேலியில் சிக்கிய மூதாட்டி பரிதாப பலி: அடையாளம் காண திணறும் போலீசார்..!
மின்வேலியில் சிக்கிய மூதாட்டி பரிதாப பலி: அடையாளம் காண திணறும் போலீசார்..!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ளது ஆசனூர் மலைப்பகுதி. அங்குள்ள தொட்டபுரம் பகுதியில், பெருந்துறை பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் வனவிலங்குகள் புகுந்துவிடாமல் தடுப்பதற்காக, நிலத்தை சுற்றிலும் சோலார் பேட்டரியில் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று மின்சார வேலியில் சிக்கிய அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தொட்டாபுரம் கிராம மக்கள், இந்த சம்பவம் குறித்து தலமலை கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் தம்புராஜ், இதுகுறித்து ஆசானூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவத்தை கண்ட ஊர் பொது மக்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணயில் மூதாட்டிக்கு 60 முதல் 70 வயது இருக்கும் என்பதும், அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த 2 நாள்களாக அவர் அந்த பகுதியில் சுற்றித் திரிந்ததும் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த மூதாட்டி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.