தமிழ்நாட்டிற்குள் நுழைந்த ஆந்திர போலீசாரை சுற்றிவளைத்து சிறைபிடித்த கிராமத்தினர்; வேலூர் அருகே பரபரப்பு!
andhra policemen were locked in tamilnadu village
கடந்த திங்கட்கிழமை இரவு ஆந்திராவிலிருந்து வேலூர் மாவட்டம் மேலகுப்பம் கிராமத்திற்கு ஒரு பழைய குற்றவாளியை தேடி வந்த ஆந்திர போலீசாரை அந்த கிராம மக்கள் வீட்டிற்குள் வைத்து பூட்டி உள்ளனர். இதனால் ஆந்திர காவல்துறையினர் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
ஆறு மாதத்திற்கு முன்பு ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து மேலகுப்பம் கிராமத்திற்கு வந்த 32 வயதான ராமகிருஷ்ணன் அந்த கிராமத்தைச் சேர்ந்த குறி சொல்லும் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்த ராமகிருஷ்ணன் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆந்திர பிரதேசம் தர்மபுரம் பகுதியில் நடைபெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் குற்றவாளியாக தேடப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் ராமகிருஷ்ணனைப் பற்றி தகவலறிந்த ஆந்திர போலீசார் கடந்த திங்கட்கிழமை இரவு வேலூர் மாவட்டம் மேலகுப்பத்திற்கு வந்துள்ளனர். தர்மபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஸ்ரீஹர்ஷா தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு மேலகுப்பம் கிராமத்திற்கு இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்தது.
அவர்கள் சீருடை அணியாமல் வந்ததால் சந்தேகமடைந்த ஊர் மக்கள், நமது ஊர் குறி சொல்லும் பெண்ணின் கணவரை தாக்குவதற்காக வந்துள்ளனர் என தவறாக புரிந்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் போலீசாரை தாக்கி ஒரு வீட்டிற்குள் வைத்து பூட்டியுள்ளனர். பின்னர் ரத்தனகிரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு வந்த ரத்தனகிரி காவல்துறையினர் ஆந்திர காவல்துறையினரை மீட்டு நடந்த சம்பவத்தை பற்றி விசாரித்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் 6 பேரும் ஆந்திராவைச் சேர்ந்த காவல்துறையினர் என்பதை அறிந்ததும் ராமகிருஷ்ணனை கைது செய்து ஆந்திர காவல்துறையினர் உடன் அனுப்பி வைத்துள்ளனர்.