நடப்பது மக்களுக்கான ஆட்சியா? சமூக விரோதிகளுக்கான ஆட்சியா? - அண்ணாமலை காட்டம்: காரணம் என்ன?..!
நடப்பது மக்களுக்கான ஆட்சியா? சமூக விரோதிகளுக்கான ஆட்சியா? - அண்ணாமலை காட்டம்.. காரணம் என்ன?..!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் நடைபெற்ற மணல் கொள்ளையை தடுக்கச்சென்ற கிராம நிர்வாக அலுவலரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வேலூர் மாவட்டம் பொண்ணையாற்றில் மணல் அள்ளும் வீடியோ பதிவு செய்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உமாபதி, அரிவாளால் வெட்டப்பட்டார். இவை செய்தியாக வெளியாகி மக்களை அதிர்ச்சியுற வைத்தன.
இந்த விசயத்திற்கு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில், மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது, மணல் கொள்ளையர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். அதே போல, வேலூர், பொன்னையாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை வீடியோ எடுத்த, முன்னாள் ராணுவ வீரர் உமாபதி அவர்களை, சமூக விரோதிகள் கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
தங்கள் கடமையைச் செய்யும் அரசு அதிகாரிகள் மீதும் சமூக அக்கறைக் கொண்ட பொதுமக்களின் மீதும், தமிழகம் முழுவதும் சமூக விரோதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. அதிகாரிகளை அவர்களது அலுவலகத்திலேயே கொலை செய்வதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாமல் இருப்பதும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனைத் தடுக்கக் கையாலாகாமல் இருக்கிறது ஊழல் திமுக அரசு.
அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் உயிர் பாதுகாப்பு இல்லையென்றால், தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா என்பதை முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.