நீங்கள் தமிழகத்தில் திமுக ஆக்சிஜன் உதவியுடன் ஐசியுவில் இருக்கிறீர்கள் ராகுல் ஜி.! நாங்கள் அப்படி இல்லை.! ராகுலை சாடிய அண்ணாமலை
நீங்கள் தமிழகத்தில் திமுக ஆக்சிஜன் உதவியுடன் ஐசியுவில் இருக்கிறீர்கள் ராகுல் ஜி.! நாங்கள் அப்படி இல்லை.! ராகுலை சாடிய அண்ணாமலை
மக்களவையில் நடைபெற்ற குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தமிழக மக்களை பாஜக ஒருபோதும் ஆளமுடியாது எனக் கூறினார். இதுதொடர்பான வீடியோ நேற்று முதல் வைரலானது.
ராகுல் பேசியதற்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வழக்கம்போல் உங்கள் பேச்சைக் கேட்டு நாங்கள் சிரித்து மகிழ்ந்தோம் ராகுல் ஜி. நீங்கள் உங்கள் பேச்சில் தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என்று மீண்டும் மீண்டும் கூறினீர்கள். நான் தமிழகத்தின் மைந்தன் என்ற வகையில் இந்த விஷயத்தில் உங்களை வழிநடத்த விரும்புகிறேன் ராகுல் ஜி.
வரலாற்றை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்றும், இலங்கை தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கும், ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கும் காங்கிரஸ் தான் காரணம். நீங்கள் இப்போது தமிழகத்தில் திமுகவின் ஆக்சிஜன் உதவியுடன் ஐசியுவில் இருக்கிறீர்கள். நாங்கள் புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கிறோம். நமது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரித்த புதுவை மக்களுக்கு நன்றி. அது ஒரு மைல்கல். அந்த மைல்கல்லின் அடுத்த ஜங்ஷன் தமிழகமாகத் தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.