தேவையில்லாமல் வாயை விட்டு மாட்டிக்கொண்டு சர்ச்சையில் சிக்கிய அறந்தாங்கி நிஷா!
aranthangi nisha talk about thamilisai
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல்வேறு பிரபலங்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்கள். அதேபோல அசத்தலாக காமெடி செய்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்து வருபவர் அறந்தாங்கி நிஷா. இவர் பல ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு வருகிறார்.
கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அறந்தாங்கி நிஷா. மேடையில் இவர் செய்யும் காமெடி, வசனங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது சினிமா படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
தற்போது அறந்தாங்கி நிஷா ஒரு சர்ச்சையில் சிக்கிவிட்டார். இவரும், இவருடன் இணைந்து காமெடி ஷோ நடத்தும் பழனி என்பவரும் ஒரு நிகழ்ச்சி செய்துள்ளனர். அந்த நிகழ்ச்சி திமுக சார்பில் நடந்துள்ளது. இருவரும் வழக்கம்போல் இதில் காமெடி செய்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில், பாஜக குறித்தும், பிரதமர் மோடி, மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் குறித்தும் நிஷாவும், பழனியும் மோசமான விமர்சனங்களை வைத்துள்ளனர்.
இதனைக் கேட்ட ரசிகர்கள் நீங்களே இப்படி செய்யலாமா? உங்கள் மீது எவ்ளோவோ மரியாதை வைத்திருந்தோம் என பலரும் இணையத்தில் தங்களது வருத்தத்தை தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் அறந்தாங்கி நிஷா மன்னிப்பு கேட்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்த பதிவில், "மரியாதைக்குரிய தமிழிசை அக்காவை, எந்த ஒரு தவறான எண்ணத்திலும் பேசவேண்டும் என்று நினைத்தது கூட கிடையாது. இருந்தாலும் நான் பேசியது தவறுதான். இந்த ஒரு முறை மட்டும் என்னை மன்னித்துவிடுங்கள் இனிமேல் இவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை" என்று மன்னிப்பு கேட்டார்.
இதேபோல் பழனியும் பேசும்போது, "எனது சகோதரரின் மகள் நீட் தேர்வு காரணமாக இறந்ததால் மன வருத்தத்தில் இருந்தேன். அப்பதான் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசியதில் யாருக்காவது மனவருத்தம் ஏற்பட்டிருந்தால், அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.