திருவண்ணாமலை அருகே குடும்ப தகராறில் முன்னாள் ராணுவ வீரரை அவரது மனைவியே எரித்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக முன்னால் ராணுவ வீரரின் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மாமனாரை காவல்துறை தேடி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி உஷாராணி. இந்த தம்பதியினருக்கு 13 வயதில் ஒரு மகனும் 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சுரேஷ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சில ஆண்டுகளாகவே சுரேஷ் மற்றும் உஷாராணி இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனது கணவரை பிரிந்த உஷாராணி தந்தை வீட்டில் மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி தனது மாமனார் வீட்டிற்கு சென்ற சுரேஷ் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர முயற்சி செய்திருக்கிறார்.
சம்பவம் நடந்த தினத்தன்று தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர முயன்றிருக்கிறார் சுரேஷ். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் உஷாராணியின் தந்தை பூசனம் முன்னாள் ராணுவ வீரர் சுரேஷை கடுமையாக தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து உஷாராணி சுரேஷின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்திருக்கிறார். இதில் அலறித் துடித்த சுரேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் உஷாராணியை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரது தந்தை பூசனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.