இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், பிபின் ராவத் மனைவி உட்பட 5 பேர் மரணம்.. முதல்வர் நீலகிரிக்கு பயணம்.!
இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், பிபின் ராவத் மனைவி உட்பட 5 பேர் மரணம்.. முதல்வர் நீலகிரிக்கு பயணம்.!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெல்லிங்ஸ்டன் இராணுவ முகாமுக்கு, இந்திய முப்படை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் உட்பட 9 பேர் இன்று தமிழகம் வந்தனர். இவர்கள் அனைவரும் சாலை மார்கமாக குன்னூருக்கு செல்ல இருப்பதாக திட்டமிடப்பட்ட நிலையில், காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், திடீரென திட்டம் மாற்றம் செய்யப்பட்டு இராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 அதிகாரிகள், விமானப்படை ஹெலிகாப்டரில் குன்னூருக்கு பயணம் செய்துள்ளனர். இதன்போது, குன்னூரில் நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக, மீண்டும் ஹெலிகாப்டர் கோவைக்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளது.
வரும் வழியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக மலைப்பகுதியில் மோதிய ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், 5 இராணுவ வீரர்கள் தற்போது வரை பலியாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட பலரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விஷயம் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள காரணத்தால், இராணுவ அதிகாரிகள் சம்பவ இடங்களில் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வருவதக்கவும் கூறப்படுகிறது. கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.
தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு குன்னூருக்கு வரவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் - பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் ஆகியோர் இதுகுறித்து அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமரும் - பாதுகாப்புத்துறை அமைச்சரும் தமிழகம் வரவுள்ளதாகவும் அதிகாரிகள் வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு தேவையான பணிகளை விரைந்து செய்ய அறிவுறுத்தியுள்ள நிலையில், மாலை 5 மணியளவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நீலகிரிக்கு புறப்பட்டு செல்லவுள்ளார். தமிழக தலைமை செயலாளரும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பிபின் ராவத் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக மட்டும் கூறப்படும் நிலையில், அவரது மனைவியின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.