நாங்கள் ஓட்டு போட வேண்டுமா, வேண்டாமா? பொங்கி எழுந்த பொதுமக்கள்!
bus passengers getting angry
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் கட்ட தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதனால் வெளியூர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு செல்ல பல நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். ஆனால் அங்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 27 உள்ளாட்சி தேர்தல் நாள் என்பது தெரியாதா. இதற்காக பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறோம்.
தேர்தலுக்காக ஏன் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போதிய ஏற்பாடுகள் செய்யவில்லை. நாங்கள் ஓட்டு போட வேண்டுமா, வேண்டாமா?பின்னர் எதற்காக தேர்தலில் கட்டாயம் ஓட்டு போடுங்கள் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து போலீசார் பயணிகளை சமாதானம் செய்தனர். இதனால் நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.