வீடியோ காலில் கர்ப்பிணிக்கு பிரசவம்.. தாயும், சேயும் செவிலியர்களால் பலியான பரிதாபம்.. உறவினர்கள் போர்க்கொடி.!
வீடியோ காலில் கர்ப்பிணிக்கு பிரசவம்.. தாயும், சேயும் செவிலியர்களால் பலியான பரிதாபம்.. உறவினர்கள் போர்க்கொடி.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சூனாம்பேடு, ஆண்டார்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் முரளி (வயது 36). இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி புஷ்பா (வயது 33). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று முன்தினம் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, புஷ்பாவை உறவினர்கள் மதுராந்தகம் இல்லீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லை. அவர் மருத்துவ முகாமுக்கு சென்றுள்ளார். இதனால் வீடியோ கால் மூலமாக மருத்துவரை தொடர்பு கொண்டு பேசி பிரசவம் பார்த்து செவிலியர்கள் முடிவெடுக்க, அவருக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்று பணியில் இருந்த மற்றொரு மருத்துவருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
அவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் செவிலியர்கள் பிரசவம் பார்த்தபோது, குழந்தையின் கால் பகுதி வெளியே வந்துள்ளது. இதனால் செவிலியர்கள் பதறிப்போன நிலையில், அவசர ஊர்தி மூலமாக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். செல்லும் வழியிலேயே பெண் குழந்தை பிறந்து, சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது.
இந்த தகவல் பெண்ணின் உறவினர்கள் மூலமாக அவரின் கிராம மக்களுக்கு தெரியவரவே, ஆத்திரமடைந்த மக்கள் மதுராந்தகம் - புதுச்சேரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி மருத்துவரை பணியிட மாற்றம் செய்தனர். 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.