ஜூவல்லரி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு., திருடன் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் கையில் மாவுக்கட்டு.!
ஜூவல்லரி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு., திருடன் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் கையில் மாவுக்கட்டு.!
நகைக்கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர், கைதுக்கு பின்னர் கழிவறையில் வழுக்கி விழுந்ததால் மாவுக்கட்டு போடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், மாமண்டூர் ஜி.எஸ்.டி சாலையில் இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கேசாராம் என்பவரின் மகன் தர்மாராம் சேட் என்பவர், கடந்த 10 வருடமாக நகை வியாபாரம் செய்யும் ஜிவல்லரி கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை காலை வழக்கம்போல கடையை திறந்த நிலையில், வடபாதி கிராமம் புதிய காலனியை சேர்ந்த சாம்மூர்த்தி என்பவரின் மகன் சிலம்பரசன் நகையை அடகு வைக்க வந்துள்ளார்.
தர்மாராமுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் நகையை அடமானத்திற்கு வாங்க மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த சிலம்பரசன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நகையை வாங்க மறுத்தால் கொலை செய்வேன் என மிரட்டி இருக்கிறார்.
பின்னர், அன்றைய நாளின் மாலை நேரத்தில் மதுபோதையில் கடைக்கு வந்த சிலம்பரசன், தர்மாராமை அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த தர்மாராமை மீட்ட அக்கம் பக்கத்தினர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற படாளம் காவல் துறையினர், சி.சி.டி.வி ஆதாரத்துடன் சிலம்பரசனை தேடி வந்துள்ளனர். தலைமறைவாக இருந்த சிலம்பரசனை நேற்று அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர் கழிவறைக்கு சென்ற நேரத்தில், அங்கு வழுக்கி விழுந்து அவரின் கைகளில் முறிவு ஏற்படவே, அவரை மருத்துவமனையில் அனுமதி செய்த அதிகாரிகள் சிகிச்சைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர்.