அம்பத்தூர் லாக்டவுன்: கல்யாணம் ஆகலையென்றாலும் குழந்தை வளர்க்க ஆசை.. கடத்தல்காரனாக கட்டிட பொறியாளர்..!
அம்பத்தூரில் லாக்டவுன் குழந்தை மாயமான விவகாரத்தில், கட்டிட பொறியாளர் குழந்தை வளர்ப்பு ஆசையில் கடத்தல் காரனாக மாறியது அம்பலமாகியுள்ளது.
ஒன்றரை வயதுடைய லாக்டவுன் குழந்தை மாயமான விவகாரத்தில், கட்டிட பொறியாளர் குழந்தை வளர்ப்பு ஆசையில் கடத்தல் காரனாக மாறிய பகீர் சம்பவம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சென்னையில் உள்ள அம்பத்தூர் காந்திநகரில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளில் ஒடிசா போன்ற வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருந்தனர். இவர்களுக்கு இங்கேயே தங்குமிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர் (வயது 42) என்பவர், தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்.
4 குழந்தைகளில் கடைக்குட்டி குழந்தை லாக்டவுன். இந்த குழந்தை பிறந்து ஒன்றரை வருடமே ஆகும் நிலையில், ஊரடங்கு சமயத்தில் பிறந்ததால் லாக்டவுன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தை லாக்டவுன் கடந்த 6 ஆம் தேதி மாயமாகவே, இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த 9 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் உள்ள இருக்கையில் குழந்தை லாக்டவுன் தனியே இருந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பேருந்து நிலைய காவல் துறையினருக்கு தகவலை தெரிவிக்க, கோயம்பேடு காவல் துறையினர் குழந்தையை மீட்டுள்ளனர். அப்போது, இந்த குழந்தை தான் அம்பத்தூரில் மாயமான லாக்டவுன் என்பது உறுதியானது.
இதனையடுத்து, குழந்தையை யார் இங்கு விட்டு சென்றார்கள் என்பதை கண்டறிய, சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, கட்டுமான பொறியாளர் பாலமுருகன் (வயது 28), கட்டுமான தொழிலாளியான ஒடிசாவை சேர்ந்த சுஷாந்த் பிரதான் (வயது 25) ஆகியோர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டது அம்பலமாது.
இருவரையும் கைது செய்த காவல் துறையினர் கட்டுமான பொறியாளர் பாலமுருகனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், "28 வயதாகும் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனது நண்பர்களுக்கு திருமணம் நடந்து, குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கு குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் சுஷாந்த் பிரதானின் உதவியுடன் லாக்டவுனை நான் கடத்தி சென்றேன்.
கடத்தி சென்ற குழந்தையை கடலூரை சேர்ந்த வளர்மதி என்ற பெண்ணிடம் கொடுத்து, சில நாட்கள் வைத்துக்கொள்ளுமாறு தெரிவித்தேன். அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. காவல் துறையினரும் குழந்தையை தேடி வந்ததால், அதிகாரிகளுக்கு பயந்து குழந்தையை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் வைத்துவிட்டு வந்தேன்" என்று பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், "குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் திறக்கப்பட்ட பின்னர், முதல் குழந்தை பத்திரமாக மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தையை கடத்தியவர் பணத்திற்காக கடத்தலில் ஈடுபடவில்லை. குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டு கடத்தியதாக தெரிவித்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.