ஓசி பயணத்திற்கு முயற்சி.. பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதால் ஆத்திரம்.. நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்.!
ஓசி பயணத்திற்கு முயற்சி.. பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதால் ஆத்திரம்.. நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்.!
பயணச்சீட்டு எடுக்கவில்லை என பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட 2 வாலிபர்கள், அரசு பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய சம்பவம் நடந்தது.
சென்னையில் உள்ள ஆவடி அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 30). இவர் ஆவடியில் இருந்து கீழ்க்கொண்டயார் செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை ஆவடியில் இருந்து கீழ்க்கொண்டயார் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், கலசபாக்கம் பேருந்து நிலையத்தில் 2 வாலிபர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். அவர்களிடம் பயணச்சீட்டை எடுக்குமாறு நடத்துனர் ஈஸ்வரன் கூறிய நிலையில், அந்த வாலிபர்கள் பயணச்சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பேருந்தின் நடத்துனர் ஈஸ்வரன், பேருந்தை நிறுத்தி டிக்கெட் எடுக்க மறுத்த இரண்டு இளைஞர்களையும் கீழே இறக்கி விட்டு சென்றுள்ளார். பேருந்து புறப்பட்டு சென்ற நிலையில், பேருந்திலிருந்து இறங்கி விடப்பட்டதால் ஆத்திரமடைந்த இரண்டு இளைஞர்கள் பேருந்து மீனும் அதே வழித்தடத்தில் வரும் வரை காத்திருந்துள்ளனர்.
கீழ்க்கொண்டையார் சென்ற பேருந்து மீண்டும் ஆவடி நோக்கி வருகையில், பேருந்தில் ஏறிய இளைஞர்கள் நடத்துனரை தாக்கி இருக்கின்றனர். அதனை தடுக்க முயன்ற ஓட்டுனரும் தாக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பேருந்தின் நடத்துனர் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.