முடங்கி மீண்ட சென்னை - பெங்களூர், திருப்பதி தேசிய நெடுஞ்சாலை.. Foxconn நிறுவன ஊழியர்கள் போராட்டம்.. காரணம் என்ன?..!
முடங்கி மீண்ட சென்னை - பெங்களூர், திருப்பதி தேசிய நெடுஞ்சாலை.. Foxconn நிறுவன ஊழியர்கள் போராட்டம்.. காரணம் என்ன?..!
தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கும் விடுதியில் உணவு சாப்பிட்ட பெண்கள் 200 க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட, 7 பெண்கள் உயிரிழந்ததாக வதந்தி கிளம்பி பரபரப்பு ஏற்பட்டது. தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், 7 பெண்களின் உடல்நலம் குறித்து ஆட்சியர் கூறியதும் போராட்டம் கைவிடப்பட்டது.
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் Foxconn என்ற செல்போன் உதிரி பாகம் தயார் செய்யும் தனியார் தொழிற்சாலை செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சென்னை மற்றும் வெளிமாவட்டத்தினை சார்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் - பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் பெண்கள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
வெளிமாவட்டத்தில் இருந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கு, தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் விடுதிகள் எடுத்து கொடுக்கப்பட்டு, நிறுவனத்தின் சார்பிலேயே உணவு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பூந்தமல்லி அருகேயுள்ள விடுதியில் தங்கியிருந்த பெண்கள் உணவு சாப்பிட்டுவிட்டு, 200 க்கும் மேற்பட்டோர் வாந்தி - மயக்கத்தால் அவதிப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் உடனடியாக பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்களின் நிலை குறித்து தெரியவில்லை. அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று பெண்கள் மத்தியில் தகவல் காட்டுத்தீயாக பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்நிறுவன பணியாளர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரக்கடம் போன்ற 4 இடங்களில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு 12 மணியளவில் தொடங்கிய போராட்டத்தால் சென்னை - திருப்பதி, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தாம்பரம் - வாலாஜாபாத் சாலையிலும் போராட்டம் நடந்தால் 20 கி.மீ வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பிற நிறுவனத்திற்கு செல்லும் வாகன ஓட்டிகள் போராட்டக்குழுவிடம் முதலில் வந்து பேசியும், பெண்கள் போராட்டத்தை கைவிடவில்லை. விடிய விடிய நடந்த போராட்டம் காலை நேரத்திலும் தொடர்ந்துள்ளது.
இந்த தகவலை அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பெண் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர், விசாரணை மேற்கொண்டு பெண்கள் யாரும் உயிரிழக்கவில்லை. அவர்களில் அரியலூர் மற்றும் கோடாங்கிபட்டி பகுதியை சார்ந்த பெண்கள் ஊருக்கு சென்றுவிட்டனர். விடுதி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார். நிகழ்வின் போது காவல் துறையினரும் குறைந்தளவே இருந்ததால், காவல் துறையினரும் செய்வதறியாது திகைத்தனர்.
காலை நேரத்திற்கு பின்னர் கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு, போராட்டக்குழுவுடன் இணைந்த பொதுமக்களையும் காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். ஆண் தொழிலாளர்களை காவலர்கள் வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றியதால், பெண் தொழிலாளர்கள் காவல் வாகனத்தை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். இதனால் இருதரப்பு தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.
நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோர் பிற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்கள் குறித்த தகவலை தெரிவித்து, 3 பெண்களை வீடியோ காலில் பேச வைத்தனர். இதனால் போராட்டக்குழு போராட்டத்தை கைவிட்டு காலை 11 மணியளவில் கலைந்து சென்றது. இந்த போராட்டத்தால் 9 மணிநேரம் பாதிக்கப்பட்டு இருந்த சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து, மெல்ல சீரடைய தொடங்கியது.