இதை செய்ய மறுத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் - சென்னை மாநகர ஆணையர் எச்சரிக்கை.!
இதை செய்ய மறுத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் - சென்னை மாநகர ஆணையர் எச்சரிக்கை.!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ளதால், தேர்தல் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. தேர்தல் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பதாகை போன்றவை வரைவதற்கு, சுவரொட்டி ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை நகரின் சில பகுதிகளில் வேட்பாளரின் சுவரொட்டி உட்பட பல்வேறு விளம்பரங்கள் அப்படியே இருப்பதால், அதனை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அரசியல் விளம்பரங்கள் அகற்றப்படாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவிக்கையில், "தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அரசு மற்றும் பொது இடங்கள், தனியார் சுவர்களில் உள்ள அரசியல் விளம்பரங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். பேனர் போன்ற எதுவும், எங்கும் இருக்க கூடாது.
விதியை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சுவரொட்டி ஒட்டிஉள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். வழக்குப்பதிவு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை தேர்தல் செலவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஆகையால், வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறையை பின்பற்ற வேண்டும். சென்னையில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. கூடுதலாக 45 படைகள் ஏற்படுத்தப்பட்டு, 90 பறக்கும் படைகள் 3 வேளை சுழற்சி முறையில் 15 மண்டலத்தில் பணியில் இருப்பார்கள்" என்று கூறினார்.