சென்னை தனியார் வங்கி கொள்ளை சம்பவத்தில்; 15 கிலோ தங்கம் மீட்பு.. மூன்று பேர் கைது..!
சென்னை தனியார் வங்கி கொள்ளை சம்பவத்தில்; 15 கிலோ தங்கம் மீட்பு.. மூன்று பேர் கைது..!
சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் பெடரல் வங்கிக்கு சொந்தமான நகைகடன் பிரிவு இயங்கி வருகிறது. நேற்று பட்டப் பகலில் இந்த வங்கியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்று தெரிய வந்ததுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருக்கும் நான்கு குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இதில், பாலாஜி என்பவரை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக சக்திவேல் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில், சுமார் 15 கிலோ தங்கம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனிப்படை காவல்துறையினர், விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும், கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் மீதமுள்ள 17 கிலோ தங்கத்தை மீட்கும் பணிகள் நடந்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.