12 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் பேய் கனமழை: விடுக்கப்பட்டது ஆரஞ்சு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
வெளுத்துவாங்கப்போகும் கனமழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 8 மாவட்டங்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 19 ஆம் தேதியான இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடத்திலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
20ம் தேதியான நாளை கடலோர மாவட்டத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், இப்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.