சென்னையில் ஆட்டிப்படைக்கும் கொரோனா! சிகிச்சைக்காக பள்ளிகளை கையகப்படுத்தும் மாநகராட்சி!
chennai schools will be in control of municipality
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் கொரோனா சிகிச்சைக்கான வார்டுகளாக மாற்ற பள்ளிகளை தயார் படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்து இருக்கிறது.
சென்னையில் மட்டும் இதுவரை 910 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதில் 681 தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சமூக பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளதால் அறிகுறியே இல்லாமல் சிலருக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகமான கொரோனா சிகிச்சை வார்டுகளை ஏற்படுத்தும் பணியினை சென்னை மாநகராட்சி முடுக்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் அணைத்து பள்ளிகளையும் மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் அளிக்க வேண்டுமென அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அடிப்படை வசதிகள் தயாராக வைத்திருக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் பள்ளிகளில் முகாம் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் பார்வையிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.