திருமணத்திற்கு மறுத்த காதலன்.. இரயில் பயணத்தில் ஆற்றில் குதித்து உயிரை விட்ட பெண்.. பதறிப்போன பயணிகள்.!
திருமணத்திற்கு மறுத்த காதலன்.. இரயில் பயணத்தில் ஆற்றில் குதித்து உயிரை விட்ட பெண்.. பதறிப்போன பயணிகள்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, சின்ன கவானம் ஜோதிலிங்கம் தெருவில் வசித்து வருபவர் சஞ்சய். இவரின் மகள் துர்கா தேவி (வயது 23). இவர் பொன்னேரியில் உள்ள தனியார் கார்மெண்ட் நிறுவனத்தில் 5 வருடமாக டெய்லராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் - கும்மிடிபூண்டியை சேர்ந்த இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இருவரும் காதலித்து வந்த நிலையில், துர்கா தேவி காதலனை திருமணம் செய்ய வற்புறுத்தி இருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்த காதலன், தனது பொருளாதார சூழ்நிலையை மேற்கோளிட்டு, தற்போது திருமணம் செய்ய இயலாது என்று கூறியதாக தெரியவருகிறது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, காதல் முறிந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட மனவேதனையில் துர்கா தேவி இருந்து வந்த நிலையில், நேற்று மதியம் பொன்னேரியில் இருந்து சென்னை சென்ட்ரல் வர மின்சார இரயிலில் பயணம் செய்துள்ளார். இவர் வாசல் அருகே நின்று பயணம் செய்த நிலையில், பயணிகள் அவர் வேடிக்கை பார்த்தபடி பயணிக்கிறார் என்று எண்ணியுள்ளனர்.
இந்த நிலையில், இரயில் எண்ணூர் பாலம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே சென்றபோது, திடீரென துர்கா தேவி ஆற்றில் குதித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
துர்கா தேவி ஆற்றில் குதித்த இடத்தில் அவரை தேடிய நிலையில், சுமார் 6 மணிநேரத்திற்கு பின்னர் கரையொதிங்கிய அவரின் சடலம் மீட்கப்பட்டது. துர்கா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த எண்ணூர் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.