ஊருக்கே வெளிச்சம் தந்த பிலிப்ஸ் நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய திருட்டு பணியாளர்கள்; சென்னை அலுவலகத்தில் பகீர் சம்பவம்.!
ஊருக்கே வெளிச்சம் தந்த பிலிப்ஸ் நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய திருட்டு பணியாளர்கள்; சென்னை அலுவலகத்தில் பகீர் சம்பவம்.!
சென்னையில் உள்ள தரமணி பகுதியில் பிலிப்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலமாக, பிலிப்ஸ் நிறுவனம் கிளைகள் கொண்ட நாடுகளுக்கு பணம் அனுப்புவது போன்ற பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
இந்த நிறுவனத்தின் மேலாளர் ரமேஷ் சொக்கலிங்கம் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தனது நிறுவனத்தில் அக்கவுண்டிங் மற்றும் ஐடி துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் SAP எனப்படும் செயலியை பயன்படுத்தி வருவார்கள்.
இதன் மூலமாக பணப்பரிமாற்றம், நிறுவனத்தின் விபரங்கள் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இந்த நிலையில், சீனியர் அக்கவுண்டன்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆக பணியாற்றி வரும் அகஸ்டின், அவரின் நண்பர் ராபின் கிறிஸ்டோபர் ஆகியோர் சேர்ந்து 5 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளனர்.
இது வெளிநாட்டு அலுவலகத்தில் வங்கி கணக்கு விபரங்கள் சோதனை செய்யப்பட்டபோது உறுதியானது. அதிகாரிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியைச் சேர்ந்த அகஸ்டின், தனது நண்பர் ராபின் கிறிஸ்டோபருடன் சேர்ந்து ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் தனது நிறுவனத்தில் இருந்து பணம் அனுப்புவதற்கு போலியான ரசீதுகளை தயார் செய்துள்ளனர்.
இதனை தனது வெளிநாட்டு நண்பர்களுக்கு அனுப்பி, அதனை மீண்டும் தனது மாமனார், மாமியார், நெருங்கிய நண்பர்கள் ஆகியோரின் உதவியுடன் பெற்று செலவு செய்துள்ளனர். இவர்களின் வீட்டில் நடந்த சோதனையில் 215 சவரன் தங்க நகைகள், 6 லட்சம் ரொக்க பணம், கார், இருசக்கர வாகனம், மடிக்கணினி, விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள தரமணி அலுவலகத்தில் இருந்து சர்வதேச அளவில் 156 நாடுகளுக்கு பிலிப்ஸ் நிறுவனம் தனது பண பரிவர்த்தனையும் மேற்கொண்டு வந்துள்ளது. இவ்வாறான சூழலில் தான் பெரிய அளவிலான பண பரிவர்த்தனை நடக்கும் இடத்தில், சிறிய பணத்தை கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இருவரும் மோசடி செய்து சிக்கி இருக்கின்றனர்.