ஆம்னி பஸ்ஸை மிஞ்சும் கட்டண கொள்ளை.. தென்மாவட்ட விமான கட்டணம் கிடுகிடு உயர்வு.!
ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைவிட மோசம்.. தென்மாவட்ட விமானத்திற்கு கட்டணம் கிடுகிடு உயர்வு.!
உலகம் முழுவதும் டிச. 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த வருடத்தில் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் தினம் வருவதால், விடுமுறைக்காக பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். மேலும், தென்மாவட்டம், கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து பணியாற்றும் கிருத்துவ மக்கள் சொந்த ஊர்களில் சென்று குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இதனால் இரயில், பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள நிலையில், பலரும் விமானங்களில் செல்லவும் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், கொச்சி செல்லும் விமானத்தில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நாளொன்றுக்கு 4 விமானமும், மதுரைக்கு 6 விமானமும், திருவனந்தபுரத்திற்கு 2 விமானமும், கொச்சிக்கு 2 விமானமும் இயக்கப்படுகின்றன.
அனைத்து விமானத்திலும் பெரும்பாலான இருக்கைகள் முன்பதிவாகிவிட்ட நிலையில், தென்மாவட்ட விமானங்களில் கட்டணம் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது. ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக பண்டிகை காலங்களில் திடீரென மறைமுகமாக உயர்த்தப்படும் கட்டணத்தை போல, விமான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல விமான கட்டணமாக ரூ.3,500 வசூலிக்கப்படும் நிலையில், இது ரூ.10,500 ஆக உயர்ந்துள்ளது. 24 ஆம் தேதியான இன்று சொந்த ஊர் செல்ல ரூ.12 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மதுரைக்கு செல்ல வழக்கமாக ரூ.3,500 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.9,800 உயர்த்தப்பட்டுள்ளது.
இதனைப்போல திருவனந்தபுரம் மற்றும் கொச்சி செல்ல ரூ.3,500 கட்டணமாக இருந்த நிலையில், அவை ரூ.9,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவா செல்லும் விமானத்திற்கு கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விஷயம் குறித்து விமான நிறுவனங்கள் தெரிவிக்கையில், "நாங்கள் விமான கட்டணத்தை உயர்த்தவில்லை. விமானத்தில் பல அடுக்கு கட்டணம் உள்ளது. குறைந்த கட்டணம், மீடியம், பிசினஸ் கிளாஸ் என்ற வகையில், அதில் உள்ள டிக்கெட்டுகள் விலை. தற்போதைய நிலையில் உயர்ந்த கட்டண இருக்கைகள் மட்டுமே மீதி இருப்பதால், பயணிகளுக்கு அது கட்டண உயர்வு போல தெரிகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.