மழை வெள்ளத்தில் சிக்கிய ஸ்கூல் பஸ்!.. பயத்தில் அலறிய சிறுவர்கள்!.. போராடி மீட்ட பொதுமக்கள்..!
மழை வெள்ளத்தில் சிக்கிய ஸ்கூல் பஸ்!.. பயத்தில் அலறிய சிறுவர்கள்!.. போராடி மீட்ட பொதுமக்கள்..!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொடிய வெயில் வாட்டி வதைத்தது. கோடை காலத்தை போன்று வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அந்த பகுதியில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த கனமழையால், கோவில்பட்டி மெயின் ரோடு, மார்க்கெட் ரோடு, மந்தித்தோப்பு ரோடு, புதுரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து
கோவில்பட்டி, இளையரசனேந்தல் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் சுமார் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக அந்த வழியாக பள்ளி மாணவ-மாணவியரை ஏற்றிவந்த தனியார் பள்ளி பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியது. இதனை தொடர்ந்து அந்த பேருந்தினுள் மழை வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டது.
இதனை கண்டு அஞ்சிய 25 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதனையடுத்து அந்த வழியாகச் சென்றவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர் மற்றும் பேருந்து உதவியாளர் ஒவ்வொரு குழந்தையாக பேருந்தில் இருந்து இறக்கி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.