போலி ஆவணத்தில் தனியார் மருத்துவமனையில் வேலை.. ரூ.85 இலட்சத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய காசாளர்.!
போலி ஆவணத்தில் தனியார் மருத்துவமனையில் வேலை.. ரூ.85 இலட்சத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய காசாளர்.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோசவம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் யுவராஜ் (வயது 29). கோவையில் உள்ள சிட்ரா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில், கடந்த 6 மாதமாக காசாளர் பிரிவில் இவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி மருத்துவமனையின் 3 நாட்கள் வருமானமாக ரூ.85 இலட்சத்தை திருடிவிட்டு தலைமறைவாகி இருக்கிறார்.
இந்த விஷயம் தொடர்பாக மருத்துவமனை துணைத்தலைவர் நாராயணன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் யுவராஜுக்கு வலைவீசி தேடி வந்தனர். சென்னையில் பதுங்கியிருந்த யுவராஜை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள், ரூ.72 இலட்சத்து 40 ஆயிரம் பணத்தை மீட்டனர். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், கைதான யுவராஜின் பெற்றோர்கள் இறந்துவிட்டதால், குடும்பம் இன்றி வசித்து வந்த அவர் தனியார் மருத்துவமனையில் திருடி, சென்னை நட்சத்திர விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார். மேலும், வாடகைக்கு கார், வீடு, வீட்டிற்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை வாங்கி ரூ.10 இலட்சத்தையும் செலவு செய்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் யுவராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் போலியான ஆவணம் மூலமாக பணிக்கு சேர்ந்ததும் அம்பலமாகியுள்ளது.