ஆசையாக பிரியாணி பார்சல் வாங்கி சென்ற இளைஞர்கள்.! பிரியாணியை திறந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், கெட்டுப்போன பிரியாணி விற்பனை செய்தவர் மீது இளைஞர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், "பிஸ்மி பிரியாணி " என்ற கடை ஒன்று இயங்கி வருகிறது. அந்தக் கடையில் தினந்தோறும் ஏராளமான பிரியாணி பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பிரியாணி வாங்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் 2 பேர் அந்த கடையில் பிரியாணியை பார்சல் வாங்கி சென்றுள்ளனர்.
ஆனால் கடைக்காரர் பார்சல் கட்டும் இடத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு செய்த பிரியாணி ஒன்று கெட்டுப்போன நிலையில் மறைந்து கிடந்துள்ளது. அப்போது அந்த இளைஞர்களுக்கு அந்த பழைய பிரியாணியையும் சேர்த்து பார்சலில் அனுப்பியுள்ளார் கடைக்காரர். அதை வாங்கி சென்ற இளைஞர்கள் அந்த பார்சலை பிரித்து சாப்பிட்ட போது, வாந்தி எடுக்கும் அளவிற்கு அந்த பிரியாணியில் இருந்து வாசனை வீசியுள்ளது. இதனையடுத்து பிரியாணி கெட்டு போனதை அறிந்த அந்த இளைஞர்கள் உடனடியாக கடைக்குச் சென்று உரிமையாளர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர்.
அந்த கடைக்காரரும் கூலாக ஏதோ தெரியாமல் நடந்து விட்டது மன்னிக்கவும், காத்திருங்கள் புது பிரியாணி பார்சல் செய்து தருகிறேன் என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த இளைஞர்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்காரரிடம் விசாரித்தபோது பழைய பிரியாணியை பார்சல் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார் கடைக்காரர். இதனையடுத்து அந்த கடைக்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவிட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.