எடப்பாடி பழனிச்சாமி மீது அளிக்கப்பட்ட புகார்...!! தீவிரமாக ஆவணங்களை திரட்டுகிறது காவல் துறை...!!
எடப்பாடி பழனிச்சாமி மீது அளிக்கப்பட்ட புகார்...!! தீவிரமாக ஆவணங்களை திரட்டுகிறது காவல் துறை...!!
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்பு மனுவில் பொய்யான தகவல்களை அளித்ததாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பான ஆவணங்களை திரட்டும் வேலையை சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிராமண பாத்திரத்தில் ஆண்டு வருவாய், அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் போன்றவற்றை குறைத்து பொய்யான தகவல் அளித்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் மிலானி என்பவர் சேலம் கோர்ட்டில் புகார் மனு அளித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு, மனுவில் உண்மை தன்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி குற்றப்பிரிவு காவல்துறையினர் எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புகார் தொடர்பாக முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் சூரியா, காவல் ஆய்வாளர் புஷ்பராணி ஆகியோர் அதற்கான ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் வங்கி வரவு, செலவு தொடர்பான விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும், புகார் அளித்த தேனியை சேர்ந்த வழக்கறிஞர் மிலானியையும் அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.