கும்மிடிப்பூண்டி அருகே தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு காரணமான கந்து வட்டிக்காரர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .
கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சரிதா. இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. பிரகாஷ் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் கார் மெயின்டனன்ஸ் செலவுகளுக்காக ஆரம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த தசரதன் என்பவரது மகன் ராஜா என்ற முனுசாமி இடம் வட்டிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்.
இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் அவரால் ஒழுங்காக வட்டியை கட்ட முடியவில்லை என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு வந்த ராஜா என்ற முனுசாமி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சரிதாவை அவதூறாக பேசி அசல் மட்டும் வட்டியை உடனடியாக திருப்பி செலுத்தும் படி மிரட்டி இருக்கிறார். மேலும் வியாழக்கிழமைக்குள் பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்றால் ஊர் கூட்டத்தில் வைத்து அவமானப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த பிரகாஷ் மற்றும் சாரதா தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர் . இதனைத் தொடர்ந்து உறவினர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணவன் மற்றும் மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களை தற்கொலைக்கு தூண்டியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாக கூறி சமரசம் செய்ததை எடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிறுவியது.