ராஜராஜசோழன் நினைவிடத்தை ஆய்வுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!!
court order to Archaeological department
சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசர் முதலாம் ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளும் சிறந்து விளங்கியது. இதற்கான சான்றுகளாக தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்டவை உள்ளன. இவருடைய ஆட்சியும், கட்டிடக்கலையும் இன்றுவரை உலக அளவில் அனைவராலும் பாராட்டப்பட்டு புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது.
அவரது நினைவிடம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கிறது. ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அதில் மன்னரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் மாளிகைகள் உள்ளன. இங்கு முறையாக தொல்லியல் துறை ஆய்வு செய்தால் சோழர்களின் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும்.
இதேபோல் மாமன்னர் ராஜ ராஜ சோழனின் சிலையை இந்தியப் பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிறுவ வேண்டும். அவரது சமாதி உள்ள இடத்தில் மணிமண்டபம் கட்டி அதனை அனைவரும் பார்த்து அறியும் விதமாக சுற்றுலாத் தளமாக அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் தொல்லியல் குழுவினர் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ராஜராஜசோழன் நினைவிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.