பறந்து வந்து விழுந்த எழவுமாலையால் புதுமாப்பிள்ளை பலி : கடலூரில் தொடரும் சோகம்..!
பறந்து வந்து விழுந்த எழவுமாலையால் புதுமாப்பிள்ளை பலி : கடலூரில் தொடரும் சோகத்திற்கு
இறந்தவரின் சடலத்தை எடுத்து செல்கையில் வீசப்பட்ட மாலை இருசக்கர வாகனத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. எழவெடுத்தவர்களின் எகனை செயலால் ஏற்கனவே ஒருவரின் உயிர் பறிபோக, காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து சில மாதங்கள் உயிரிழப்பு இல்லாமல் இருந்த சூழலில் மீண்டும் எழவு மாலையால் மற்றொரு வீட்டில் துக்க நிகழ்வு அரங்கேறியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள எல்.என்.புரத்தில் வசித்து வருபவர் மோகன் (வயது 55). இவர் பண்ருட்டி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 45). தம்பதியருக்கு ராஜ்குமார், ராஜ்கமல் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் ராஜ்குமார் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் நிலையில், திருமணமாகி தனது மனைவியுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.
பி.எஸ்.சி படித்திருந்த ராஜ்கமலும் பெங்களூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதை தொடர்ந்து, ராஜ் கமலுக்கும், வேப்பூரை சேர்ந்த என்ஜினியர் குணசுந்தரிக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் குணசுந்தரியும், விஜயலட்சுமியும் வெளியூர் சென்று நேற்று முன்தினம் பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜ்கமல் முதலில் தனது மனைவி குணசுந்தரியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
பின் தனது தாய் விஜயலட்சுமியை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டபோது, சென்னை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு எதிரே விஜயலட்சுமி நடந்து வந்து கொண்டிருந்தார். எனவே ராஜ்கமல் உடனடியாக மோட்டார் சைக்கிளை திருப்பவே, சவ ஊர்வலத்தின் போது ரோட்டில் வீசப்பட்டு மழையில் நனைந்து கிடந்த மலர்மாலை மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கி கவிழ்ந்தது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜ்கமலின் தலை சுவரில் மோதி சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து அவர் பரிதாபமாக துடிதுடிக்க உயிரிழந்தார். இதனை கண்ட அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல உயிரிழப்பு ஏற்பட்ட காரணத்தால் காவல் துறையினர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வோர் இவ்வாறு நடந்துகொள்ள கூடாது, மாலைகளை சாலைகளில் வீசி செல்ல கூடாது என கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தனர். மக்களும் சில மாதங்கள் அதனை கடைபிடித்துள்ளனர். இறுதியாக ஆண்டுகள் கழிந்து செல்ல மக்களும் நடவடிக்கையை மாற்றியதால் வந்த விளைவு மரணத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.