இருண்டு கிடைக்கும் மேம்பாலம்; சாலை விபத்துகளால் காவு வாங்க காத்திருப்பா?.. மக்கள் கோரிக்கை.!
இருண்டு கிடைக்கும் மேம்பாலம்; சாலை விபத்துகளால் காவு வாங்க காத்திருப்பா?.. மக்கள் கோரிக்கை.!
இரவு நேரங்களில் ஒளிராத மின்விளக்குகள் காரணமாக விபத்துகள் வாய்ப்பு அதிகரித்துள்ளதால், மின் விளக்குகளை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலத்தை அடுத்த பெண்ணாடம் நகரம் மாவட்டத்தின் பிரதான நகரம் ஆகும். இந்நகரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு பெண்ணாடம் முக்கிய சந்தைப்பகுதியாகவும், வளர்ந்த பகுதியாகவும் இருக்கிறது. இதனால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம்.
அதுமட்டுமல்லாமல், பெண்ணாடத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் சாலையின் வழியே அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காடு, ஆலத்தியூர் சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் பிரதான வழித்தடம் அமைந்துள்ளது.
இவ்வழித்தட உதவியுடன் நாளொன்றுக்கு நூற்றுக்கும் அதிகமான சிமெண்ட் பாரமேற்றும் கனரக லாரிகள் சென்று வருகின்றன. இதில், பெண்ணாடத்தை அடுத்த ஈச்சங்காடு பிரிவில் இரயில்வே மேம்பாலம் உள்ளது. மேம்பாலம் உதவியுடன் போக்குவரத்து இடையூறின்றி இயங்குகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இறையூர் சர்க்கரை ஆலைக்கு முன்பு அமைந்துள்ள இரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வழி கடலூர் - தொழுதூர் பிரதான இணைப்புச்சாலை என்பதால் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. சில நேரங்களில் மின் விளக்குகள் இரவுக்கு பின்னர் தாமதமாக ஒளிரவிடப்படுகிறது.
இவ்வாறான தருணத்தில் மின் விளக்குகள் ஒளிராமல் இருப்பது விபத்துகளுக்கு வழிவகை செய்யும் என சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், மின் விளக்குகளில் பழுது இருந்தால் அதனை நீக்கி எரிய செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.