ஆபத்தான மலைமுகட்டில் செல்பி ஆசை.. 500 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் நிலை?.. கொடைக்கானலில் சோகம்.!
ஆபத்தான மலைமுகட்டில் செல்பி ஆசை.. 500 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் நிலை?.. கொடைக்கானலில் சோகம்.!
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த 8 இளைஞர்களில் ஒருவர் மதுபோதையில் செல்பி எடுக்க முயற்சித்து 500 அடி பள்ளத்தில் விழுந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் உயிருடன் இருக்கிறாரா? அல்லது இறந்துவிட்டாரா? என அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், வட்டக்கானல் ரெட்ராக் பகுதி வனத்துறையால் தடை செய்யப்பட்ட பகுதி ஆகும். இந்த பகுதியில் ஆபத்தான பல பள்ளத்தாக்கு இருப்பதால், உயிரிழப்பு ஏற்படுவதை குறைக்கும் பொருட்டு வனத்துறை தடை விதித்துள்ளது. ஆனால், கூட்டமாக சேர்ந்து வரும் இளைஞர்கள், அதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி சென்று வரும் நிகழ்வும் நடக்கின்றது. அதில் சில விபரீதத்தில் முடிகிறது.
மதுரை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 8 இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த நிலையில், வனத்துறை தடை விதித்துள்ள ரெட் ராக் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இயற்கை அழகை கண்டு ரசித்த இளைஞர்கள், அங்கேயே மதுபானமும் அருந்தியுள்ளனர். மதுபோதையில் அனைவரும் செல்பி எடுத்த நிலையில், ராம்குமார் (வயது 32) என்ற இளைஞர் பாறையின் நுனிக்கு சென்று செல்பி எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது, நிலைதடுமாறிய இளைஞர் ராம்குமார், 500 அடி பள்ளத்தில் விழுந்து மாயமாகியுள்ளார். நண்பனை தேடிய அனைவரும் அவரின் நிலை குறித்து தெரியாததால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விசாரணைக்கு வந்த போது, இளைஞர்கள் அனைவரும் மதுபோதையில் இருப்பதை உணர்ந்துள்ளனர்.
அவர்கள் ராம்குமாரின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கூறவே, அவர்கள் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராம்குமார் 500 அடி பள்ளத்தில் விழுந்த நிலையில், அவர் இறந்துவிட்டாரா? அல்லது மரக்கிளையில் சிக்கி உயிருக்கு போராடி வருகிறாரா? என தெரியாமல் குடும்பத்தினர் கண்ணீருடன் விழிபிதுங்கி காத்திருக்கின்றனர்.