400 ஆண்டுகளாக சாலையில்லாத கிராமத்திற்கு சாலையமைத்துக்கொடுத்த கோட்டாட்சியர் பணியிடமாற்றம் - கிராம மக்கள் கண்ணீர்..!
400 ஆண்டுகளாக சாலையில்லாத கிராமத்திற்கு சாலையமைத்துக்கொடுத்த கோட்டாட்சியர் பணியிடமாற்றம் - கிராம மக்கள் கண்ணீர்..!
மலைகளின் இளவரசி என்று போற்றப்படும் கொடைக்கானல் நகரம் 1845 ல் ஆங்கிலேயர்களால் கண்டறியப்பட்டது. சுமார் 177 ஆண்டுகள் கொடைக்கானலை சாலை வசதி இல்லாத இடமாகவே வைத்திருந்தனர். அங்குள்ள மலைகள், மலைக்குன்றுகள் காரணமாக எளிதில் சாலையும் அமைக்க முடியவில்லை.
இதனால் கொடைக்கானலில் விளையும் விளைபொருட்கள் பெரியகுளம் வழியாக தலைச்சுமை மற்றும் குதிரைகள் மூலமாக கொண்டு வரப்படும். அங்குள்ள வெள்ளகவி, வில்பட்டி, தாண்டிக்குடி, மன்னவனூர், பூண்டி, கூக்கால் உட்பட பல கிராமங்களில் சாலைவசதி இல்லை. கொடைக்கானல் நகரம் வளர்ச்சியை கண்டாலும் வெள்ளகவி செல்லும் வழியில் ஏற்பட்ட ஆக்கிரம்பினால் 30 அடி நீள சாலை 3 அடி சாலையாக சுருங்கியது.
இதனால் தங்களின் ஊருக்கு சாலைவசதி வேண்டி மக்கள் 80 ஆண்டுகளாக பல அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்து இருக்கின்றனர். தேர்தல் புறக்கணிப்பு, போராட்டம் என நடத்தியும் பலனில்லை. எந்த சமயத்திலும் தன்னம்பிக்கையை இழக்காத கிராம மக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு விடிவளிக்கும் வகையில் கடந்த ஆண்டு கோட்டாட்சியராக முருகேசன் என்பவர் பணிக்கு சேர்ந்துள்ளார்.
அவரிடம் மக்கள் தங்களின் குமுறலை கூறவே, அவரும் சாலை வசதி செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் கோட்டாட்சியர் முருகேசன் கனரக வாகனத்துடன் வெள்ளகவி கிராமத்திற்கு வந்து பணிகளை தொடங்கவே, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நீதிமன்றத்தில் தடை பெற முயற்சித்தனர். அவர்களிடம் சாதனம் பேசி அனைவரையும் கோட்டாட்சியர் சாந்தப்படுத்த, வனத்துறை அதிகாரிகளின் எதிர்ப்பு வந்தபோதும் அதனையும் சரி செய்துள்ளார்.
பின்னர், 2 மாதங்களாக சாலை அமையும் பணியானது நடந்து முடிந்துள்ளது. சிக்கலான பள்ளத்தாக்கில் உள்ளூர் மக்களின் தேவையை அறிந்து கோட்டாட்சியர் முருகேசன் அதனை நிறைவேற்றி கொடுத்துள்ளார். இந்த சிமெண்ட் சாலை கடந்த சுதந்திர தினத்தின் போது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடவே, அக்கிராம மக்கள் கோட்டாட்சியரை தாரை தப்பட்டை முழங்க ஊருக்கு அழைத்துவந்து மரியாதையை கொடுத்தனர்.
இப்படியான இன்பமான நிலையில் கோட்டாட்சியர் முருகேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரின் பணியிட மாற்றத்தை அறிந்த அதிகாரிகள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர். இதனால் கோட்டாட்சியரை பிரிய இயலாத மக்கள் தங்களின் கண்ணீரை ஆனந்தமாக வெளிப்படுத்தி, கோட்டாட்சியரின் வீட்டிற்கு சென்று கதறியழுதனர். மக்கள் தங்களின் மீது வைத்துள்ள பாசத்தை புரிந்துகொண்ட கோட்டாட்சியர் முருகேசனும் மக்களின் கண்ணீரில் நனைந்துபோனார்.