அதிமுகவில் இணைந்தது ஏன்?.. 38 ஆண்டுகளாக திமுகவுக்கு உழைத்தவர் பரபரப்பு பேட்டி.!
அதிமுகவில் இணைந்தது ஏன்?.. 38 ஆண்டுகளாக திமுகவுக்கு உழைத்தவர் பரபரப்பு பேட்டி.!
திமுக மீனவர் அணியின் மாநில துணைத்தலைவர் உட்பட பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வந்த நசரேத் பிஸிலியான், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மூத்த தலைவர் தளவாய் சுந்தரம் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 38 ஆண்டுகளாக நான் திமுகவில் இருக்கிறேன். மீனவராணியில் உழைத்து வந்தேன். 2021 சட்டப்பேரவை தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில், மீனவர்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்போம் என வாக்குறுதி அளித்து இருந்தது.
ஆனால், இன்று ஒரு துரும்பைக்கூட அதற்கான முயற்சியை செய்யவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு 18 மீனவர்கள் மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திசைமாறி சென்ற மீனவர்களை அந்நாட்டு அரசு கைது செய்தது. அவர்களை விடுவிக்க ரூ.2.5 கோடி கேட்கிறது.
நமது முதல்வர் மத்திய அரசிடம் ரூ.2.5 கோடி பணம் செலுத்தி மீட்டு வர கடிதம் எழுதுகிறார். 18 மீனவர்களை மீட்க தமிழக அரசால் பணம் செலுத்த இயலாதா? இது எனது மனதை மிகவும் பாதித்தது. இனி திமுகவில் நான் பயணித்தால், மீனவ மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்பதை புரிந்துகொண்டேன்.
இதனால் தளவாய் சுந்தரம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் அதிமுகவில் இணைந்தேன். இதனால் நான் மகிழ்ச்சியும் அடைகிறேன். 38 ஆண்டுகளாக திமுகவுக்கு பணியாற்றிய நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட செயலாளர் தேர்தலில் போட்டியிட செயலாற்றினேன்.
அன்று அமைச்சர் நேரு, மனோ தங்கராஜ் என்னை மாவட்ட செயலாளர் தேர்தல் வேண்டாம் என கூறி, மீனவர் அணி செயலாளர் பொறுப்பை தருவதாக கூறினார்கள். இதனிடையே, 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் இணைந்தவருக்கு மாநில மீனவர் அணி செயலாளர் பொறுப்பை கொடுத்துவிட்டு, எனக்கு துணை பொறுப்பு வழங்கப்பட்டது.
அதில் இருந்தே எனக்கு மனம் விட்டுவிட்டது. அடுத்தடுத்த பாதிப்பு எனது மனதை பாதித்தது. இதனால் திமுகவில் இருந்து விலகினேன். எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுக மீனவர்களுக்கு பல நன்மைகளை செய்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.